மோசடியை மூடிமறைக்க பொலிஸ், ஊடகம் உதவி – ரத்னாயக்க

267 0

பிணைமுறி மோசடியை மூடிமறைப்பதற்கு ஊடகவியலாளர்கள், அரச சேவையாளர்கள் மற்றும் பொலிஸாரும் பணம் பெற்றிருக்கலாம் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு தற்போது அரசியல், பொருளதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ளது. இனங்களுக்கிடையில் வேறுபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பற்றியும் பேசுகின்றனர். அந்தப் பேச்சுடன் இனவாதத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர்.

இவ்வாறன நிலையில் பிரதி சபாநாயகர் தெரிவு நேற்று நடைபெற்றபோது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. எனினும் ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனை அடிப்படையா கொண்டு கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிப்பதற்கும் சிலர் முனைகின்றனர். அவ்வாறான ஒரு பிளவு கூட்டு எதிர்க்கட்சிக்குள் இல்லை.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பனவும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்ல. ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளுக்காகவே அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை மறைப்பதற்கு பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றியும் பேசப்படுகிறது. அவ்வாறான பெயர் பட்டியல் உள்ளதா? இல்லையா? என தெரியாதுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த மோசடியை மூடிமறைப்பதற்கு ஊடகவியலாளர்கள், அரச சேவையாளர்கள் மற்றும்  பொலிஸாரும் பணம் பெற்றிருக்கலாம் எனவும் அவர்  தெரிவித்தார்.

Leave a comment