காவிரி நீர் விவகாரம்-கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வன்முறை (காணொளி)

400 0

காவிரி  நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவினை அடுத்து பெங்களுரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பெங்களுரில் தமிழக வாகனங்களைத் தாக்கியவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தினர்.
இதனையடுத்து, தமிழகம் இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்திருந்த கர்நாடகா பயணிகளின் வாகனங்கள் மீதும் அப்பகுதி மக்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் 20ஆம் திகதி வரை தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்களும் வன்முறையும் வெடித்தன.
இந்நிலையில் இன்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகளான தாண்டவபுரா, மாண்டியாவில் தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த கடைகள் மற்றும் அவர்களது வாகனங்களை அடித்து நொருக்கிய கன்னட அமைப்பினர், வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அப்பகுதிக்கு வந்த கர்நாடக பொலிஸார் அவர்கள் மீது தடியடி நடாத்தி விரட்டியடித்தனர்.
பெங்களுரில் பூர்விகா மொபைல் கடை,  அடையாறு ஆனந்த பவன் உணவகம் ஆகியவையும் தாக்குதலுக்கு உள்ளாகின.
தமிழக வாகனப் பதிவெண் கொண்ட பாரவூர்திக்கு தீ வைக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களுரில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில்களும்  நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். பெங்களுர் நகரம் முழுவதும் அறிவிக்கப்படாத ஹர்தால் போல காட்சியளிப்பதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் தமிழர்கள் மீதும் தமிழக வாகனங்கள் மீதும், தாக்குதல் நடத்தப்படுவதை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் தாக்கப்படுவதன் எதிரொலியாக, அத்திபள்ளியில் கர்நாடக வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.