தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தினமும் ஊழல் நடக்கிறது – கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ

220 0

தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தினமும் ஊழல் நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சிறு மின்விசை தண்ணீர் தொட்டிகளை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர். ராமசாமி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நதிநீர் பங்கீடு சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின்படி நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் சரியாக கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையும் கட்டக் கூடாது என்று கூறுகிறார்கள். அது உண்மையாகவே பாராட்டத்தக்கது. ஆனால் கட்டினார்கள் என்றால் அதைத் தடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்று நமக்குத் தெரியவில்லை?

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்த பிறகு இதற்கு என்னென்ன அதிகாரம் எந்தெந்த வகையில் செயல்படும் என்பதை தெரிந்து கொண்டு தான் முழு ஆதரவையும் அல்லது அவர்கள் செய்த தவறுகளையும் சொல்ல முடியும்.

மேலும் குட்கா போதைப் பொருள் பிரச்சனை தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போதும் நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் விலக்கி வைக்க வேண்டும்.

ரூ.200 கோடி ஊழல் என்பது எல்லாம் சாதாரணமாகி விட்டது. தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் கோடி என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் தினந்தோறும் ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடக்கிறது. தமிழக அரசு மெத்தனமாக உள்ளது இவர்களுக்கு கமி‌ஷன் வாங்குவதைத் தவிர வேறு எந்த கவனமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment