தடைப்பட்டுள்ள அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்

246 0

தடைப்பட்டிருக்கும் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாதம் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று 8ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வின் ஆரம்பத்தை முன்னெடுத்து நிகழ்த்திய விசேட உரைமீதான சபை ஒத்திவைப்பு விவாதம் சபையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு, கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்காமல் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர். தமிழர்களின் அரசியல் உரிமைகள், பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை எவராலும் புதைக்க முடியாது பிரிக்கப்படாத நாட்டுக்குள், தமிழ் மக்களும் சமமான பிரஜைகளாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும்.

நாடு எதிர்கொள்ளும் பாரிய சிக்கல்களில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பது முக்கிய விடயமாகும். அதிகரித்துள்ள ஊழல் மோசடிகள் இந்த நிலைமைக்கு பங்களிப்புச் செலுத்தும் வகையில் அமைகின்றன. வடக்கு, கிழக்குப் பிரச்சினை தீர்க்கப்படும்வரை நாட்டில் சபீட்சத்திற்கு இடமில்லை. நாட்டின் மீது கொண்டிருக்கம் அக்கறை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இதுபற்றிய கருத்துக்களை முன்வைப்பது அவசியமானதாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சகலரையும் ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரிக்கப்படாத நாட்டுக்குள், பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள், சகலரும் சமவுரிமையுடன் வாழும் நாட்டுக்குள் வடக்கு, கிழக்குப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின் ஊடாகவே இதனைச் செய்ய முடியும். இவ்வாறான நிலையிலேயே நாம் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரையானது 2015ஆம் ஆண்டு 8ஆவது பாராளுமன்றத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து ஆற்றிய உரையின் தொடர்ச்சியானது எனக் கூறியிருந்தார். வடக்கு, கிழக்குப் பிரச்சினை முக்கியமான விடயம் என்பதை ஜனாதிபதி அடையாளம் கண்டு தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுத் தொடரப்பட வேண்டியது அவசியமாகும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமையச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2015 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Leave a comment