‘எச்1பி’ விசாவை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: அமெரிக்காவில் இந்திய நிறுவனத்துக்கு அபராதம்!

221 0

இந்தியாவில் இருந்து பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல ‘எச்1பி’ விசாவை மீறி செயல்பட்டதாக அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனத்துக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 44 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், நெவார்க் நகரின் சிலிக்கான் வேலி பகுதியில் கிளவுட்விக் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பாங்க் ஆப் அமெரிக்கா, காம்காஸ்ட், ஜே.பி. மோர்கன், நெட் ஆப், டார்ஜட், விசா, வால்மார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் என சொல்லப்படுகிறது.

இந்த நிறுவனத்தை நிறுவி நடத்தி வருபவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த மணி சாப்ரா ஆவார். இவர் இந்தியாவில் இருந்து ‘எச்1பி’ விசாவில் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று உள்ளார். அவர்களுக்கு மாத ஊதியம் 8,300 டாலர் (சுமார் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம்) தரப்படும் என உறுதி அளித்து இருக்கிறார். ஆனால் அதன்படி நடந்துகொள்ளாமல் மாதம் வெறும் 800 டாலர் மட்டுமே (சுமார் ரூ.52 ஆயிரம்) வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக புகார்கள் எழுந்தன.

அவற்றின்பேரில் அமெரிக்க தொழிலாளர்துறை விசாரணை நடத்தியது. விசாரணையில், அந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 44 டாலர் (சுமார் ரூ.1 கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 700) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை அந்த நிறுவனம் 12 தொழிலாளர்களிடம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment