இராணுவ தலைமையக காணி விற்பனை,உயர் மட்ட விசாரணை ஆரம்பம்- ருவன்

216 0

இராணுவத் தலைமையக காணி விற்பனையில் நிதி மோசடி இடம்பெற்றிருப்பது உயர் மட்ட விசாரணையொன்றின் மூலம் தெரியவந்தால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ அல்லது மற்றொரு விசாரணைப் பிரிவிற்கோ மேலதிக விசாரணைக்காக இவ்விடயம் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இது விடயத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து உயர்மட்ட விசாரணையை அரசு ஆரம்பித்துள்ளது.

இராணுத் தலைமையகம் அமைந்துள்ள காணியில் 10 ஏக்கர் நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான கோடி ரூபாவுக்கு வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டு அப்பணத்தை உரிய முறையில் திறைசேரியில் வைப்பிலிடப்படவில்லையென்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இராணுவத் தலைமையகம் இராணுவ வைத்தியசாலை என்பன இயங்கி வந்த கொழும்பு காலி முகத்திடல் முன்பாக உள்ள காணியில் 10 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட ஒரு பகுதி கடந்த காலத்தில் ஹோட்டல் கட்டடத் தொகுதியொன்றை அமைப்பதற்காக வெளிநாடொன்றுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அப்பணத்தை திறைசேரியில் வைப்பிலிடாமல் வேறு வழியில் பயன்படுத்தப்பட்டு பெரும் ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனாலேயே, அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உயர்மட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment