தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜி.கே.வாசன்

220 0

தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அறிவித்ததால் சேலம், செயில் ரெப்ரேக்டரி நிறுவனத்தின் சுரங்கம் 14 மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் உத்தரவின்படி பர்ன் ஸ்டாண்டர்டு கம்பெனி லிமிடெட் சேலம் கிளையானது, 16.11.2011 முதல் செயில் ரெப்ரேக்டரி கம்பெனி லிமிடெட் ஆக மாறியது. இப்படி கம்பெனி மாறியதால் ஏற்கனவே பர்ன் ஸ்டாண்டர்டு கம்பெனியின் மூலம் அதன் அருகில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சுமார் 1800 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மேக்னசைட் சுரங்கத்தில் இருந்து மேக்னசைட் கனிமம் தோண்டி எடுத்து பிரிக்கப்பட்டு தொழிற்சாலையில் மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டது.

இந்திய உருக்காலைகளுக்கு தேவையான தீக்கற்கள் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மேக்னசைட் சுரங்கப் பணியில் நேரடியாக 750 தொழிலாளர்களும் அது தொடர்பாக 500 தொழிலாளர்களும் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர்.

சுற்றுச்சூழல் விதிமுறை மீறுதல் தொடர்பாக மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்துறை அறிவிக்கை யால் ஜனவரி 2017 ல் தமிழகத்தில் மூடப்பட்ட சுரங்கங்களில் செயில் ரெப்ரேக்டரி கம்பெனி சுரங்கமும் ஒன்றாகும். இந்த சுரங்கம் மூடப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி, வருவாயின்றி பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.

எனவே தமிழக அரசு தனது தரப்பு பணிகளை விரைவுப்படுத்தி தடையில்லா சான்றிதழ் வழங்கிட வேண்டும். அப்போது தான் கடந்த 14 மாதங்களாக வேலை வாய்ப்பின்றி, வருவாயின்றி சிரமப்படுகின்ற தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும், வருவாய் ஈட்ட முடியும்.

எனவே தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் சேலம் செயில் ரெப்ரேக்டரி கம்பெனியின் சுரங்கம் இயக்கப்பட உரிய நடவடிக்கையை எடுத்து அந்நிறுவனம் லாபத்தில் இயக்கப்படவும், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறவும் வழி வகுத்து தர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment