ஒரு வாரத்திற்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு

315 0

வெசாக் உற்சவத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு வாரத்திற்கு மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு இலங்கை மது வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இலங்கை மது வரித்திணைக்கள ஜெனரல் ஆர். சேமசிங்கவின் ஆலோசனையின் கீழ் இவ்விஷேட செயற்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. மது வரித்திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள இத் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் அற்ற மது விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக மது வரித்திணைக்களத்தின் சட்டசெயற்படுத்தல் பிரிவின் கீழ் விஷேட அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்படவுள்ளது.

மேலும் இவ் விஷேட நடைமுறைகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் பொது மக்கள் மது வரித்திணைக்களத்திற்கு அறியத்தருவதன் மூலம் இதனை சிறப்பாக முன்னெடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக தகவல்களை தெரிவிப்பதற்காக 24 மணித்தியால விஷேட சேவையும் செயற்படுத்தப்படவுள்ளது.

சட்ட விரோத மது பான விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக 011-2045077 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமும்  011-2877882 என்ற தொலைநகல் இலக்கத்தின் மூலமும் அறியத்தர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment