சஷி வீரவங்சவின் கடவுச்சீட்டு வழக்கு ஒத்திவைப்பு

416 0

போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்துள்ள வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸின் நெறிப்படுத்தலின் கீழ் சாட்சியமளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, குற்றம் சுமத்தப்பட்டுள்ள சஷி வீரவங்சவின் சாதாரண கடவுச்சீட்டில் பிறந்த வருடம் 1967 ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இராஜதந்திர கடவுச்சீட்டில் பிறந்த ஆண்டு 1971 ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு கடவுச்சீட்டுகளில் பிறந்த ஆண்டு 4 ஆண்டுகள் மாறி இருப்பதை தான் அவதானித்த போதிலும் அது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினருக்கோ அல்லது வேறு நிறுவனங்களிலோ முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு மேலதிக விசாரணை ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனது தரப்பு வாதி வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால், புதிய கடவுச்சீட்டு ஒன்றை வழங்க குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடுமாறு பிரதிவாதியான சஷி வீரவங்ச சார்பில் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த நீதவான் அப்படியான உத்தரவை தன்னால் பிறப்பிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

சந்தேகநபருக்கு கடவுச்சீட்டை வழங்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவுகள் எதனையும் பிறப்பிக்கவில்லை எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமைய இது சம்பந்தமாக முடிவுகளை திணைக்களத்தின் அதிகாரிகள் எடுக்க முடியும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment