காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கல்லறையில் அமர்ந்து அய்யாக்கண்ணு போராட்டம்

267 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் கல்லறையின் மேல் அமர்ந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்திந்திய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கரிகால சோழன் காலத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் கர்நாடகம் தடுக்கவில்லை. தற்போது காவிரியில் தண்ணீர் தராமல் மறுத்து வருகிறது. இதனால் தமிழகம் பாலைவனமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்ப்பு வழங்கியும், அதை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காக வாரியத்தை அமைக்க தள்ளி கொண்டு போகிறது.

மீத்தேன், ஸ்டெர்லைட், கெயில், நியூட்ரினோ ஆகியவை மூலம் மத்திய அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதனால் தமிழகத்தை பாலைவனமாக்குவதை பற்றி கவலைப்படுவதில்லை.

உற்பத்தி பொருட்களின் விலையை 2 மடங்காக உயர்த்துவோம். வெளிநாட்டு பொருட்களை விற்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி விட்டு ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது 50 சதவீத மரபணு விதைகளை கொண்டு வந்துள்ளனர்.

வருகிற ஜூன் மாதம் 9-ந்தேதிக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னையில் மிகப் பெரிய தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அய்யாக்கண்ணு சேலம் கலெக்டர் அலுவலம் அருகே உள்ள ஆங்கிலேயர் காலத்து கல்லறையின் மேல் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆங்கிலேயர் காலத்திலாவது எங்களுக்கு தண்ணீர் கிடைத்தது. வெள்ளையர் காலத்தில் முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி ஆற்றில் இருந்து நிறைய தண்ணீர் கிடைத்தது. இன்றைக்கு மத்திய அரசு எங்களை வஞ்சகம் தீர்க்கிறது.

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்த கல்லறையில் இருக்கிற ஆவிகள் எல்லாம் 1947-ம் ஆண்டுக்கு முன்பு உள்ளவை. இந்த ஆவிகள் எல்லாம் போய் பிரதம மந்திரிக்கு நல்ல எண்ணத்தை கொடுத்து தண்ணீர் திறந்து விட சொல்லனும் என்று கல்லறை ஆவி கிட்ட வேண்டி கிட்டோம்.

நாங்கள் காவிரி பிரச்சனையை நீர்த்து போக விடமாட்டோம். இல்லாவிட்டால் கல்லறைக்குள்ளே நாங்களும் போயிருவோம். விவசாயிகளுக்கு வேறு வழி என்ன? இருக்கிறது.

காவிரி மேலாண்மை தொடர்பான போராடங்கள் குறையவே இல்லை. எல்லாம் பக்கமும் போராட்டம் நடக்கிறது. இன்னும் வேகமாக நடக்கும். கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம்.

பா.ஜ.க. தெய்வ பக்தி, தேச பக்தி உள்ளவர்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பா.ஜனதா தமிழகத்தை அழிக்க மாட்டார்கள்.

எங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்பது நான் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment