இழப்பீட்டுக் கடிதங்களை பல மக்கள் நிராகரித்துள்ளனர்- மகேஸ் சேனநாயக்க எச்சரிக்கை

357 0

vlcsnap-2016-07-09-19h05m56s13அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படமுடியாத காணி உரிமையாளர்களுக்கே இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இழப்பீட்டுக் கடிதங்களை பல மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும், அவர்கள் நிராகரித்ததற்கான பலனை வெகு விரைவில் அனுபவிப்பர் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் முகாம் மக்களுக்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு வடக்கு மாகாண சபை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்,மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,  “ பொது மக்களுடைய காணிகளை அரசாங்கம் கொள்வனவு செய்து, அப்பிரதேசத்தில் வீடுகள் அமைத்து இடம்பெயர்ந்த மக்களுக்கே வழங்கும் திட்டமொன்றை  முன்னெடுத்திருக்கின்றது. அரசாங்கம் பொறுப்பு கூறும் வகையிலேயே காணி உரிமையாளர்களுக்கான காணிகளுக்கானஇழப்பீட்டுக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

இராணுவம் வசமுள்ள காணிகளை உரித்துடையவர்கள் எம்முடன் கைகோர்த்தால் இடமில்லாதவர்களுக்கு குடியிருப்புடன் காணி வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ஒத்துழைக்காதோர் அக்காணிக்கான இழப்பீடாக பணம் வழங்கப்படும். வலிகாமம் வடக்கில் இடம்பெயர்ந்த 971 பேரில் 920 பேருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஏனையோரை தேடிப்பிடிக்க முடியாதுபோனது. இறுதியில் பலர் இக்கடிதத்தை நிராகரித்துள்ளனர்.

இழப்பீடு தேவையில்லை என்றும், தங்களுக்குரிய சொந்தக் காணியே வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து குழப்பமடைய தேவையில்லை. ஆனாலும் அவர்களது சொந்த இடம் அவர்களுக்கே திரும்பக் கிடைக்குமா? இல்லையா? இராணுவம் அதிலிருந்து வெளியேறுமா? இல்லையா அல்லது அவற்றை விடுத்து இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வது இலாபமா என்பது குறித்து எதிர்வரும் சில மாதங்களில் கடிதத்தை நிராகரித்தவர்களுக்கு புரியவரும்” என்றார்.

எவ்வாறாயினும் யாழ் படைகளின் கட்டளைத் தளபதியின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைவெளியிட்டிருந்த  வடமாகாண சபை, படையினர் வசமிருக்கும் காணிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு படையினருக்கு யார் அனுமதி வழங்கினர் என்றும் கேள்வி எழுப்பியிருந்ததோடு, வடக்கு மாகாண முதலமைச்சரால் சிறீலங்கா அதிபர் மைத்திரி, ரணில் மற்றும் அரச தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.