ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் கைது

254 0

ஈராக்கில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம், ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அந்த நாட்டின் பிரதமர் ஹைதர் அல்அபாதி தெரிவித்தார்.

ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை. இந்த நிலையில், நினிவே மாகாணத்தில் கால் பதித்து உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.நேற்று முன்தினம் அங்கு தால் அபார் நகரை அடுத்து உள்ள அபு மரியா கிராமத்தில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

மொசூல் பகுதியில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் கைது செய்யப்பட்டு உள்ள 6 ஐ.எஸ். பயங்கரவாதிகளில் ஒருவர் பெண் ஆவார்.

சமீபத்தில் மேற்கு மொசூல் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Leave a comment