சென்னைக்கு வருகை தரும் மோடிக்கு அ.தி.மு.க.வினர் பச்சை கொடி காட்டுவதா?- திருமாவளவன் கண்டனம்

318 0

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க அரசு பச்சை கொடி காட்டுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் தி.மு.க தலைமையில் அனைத்து கட்சியினரும் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழ்சமூகத்திற்கு மாபெரும் துரோகத்தை செய்துவருகிறது. மத்திய அரசுக்கு உடந்தையாக உச்சநீதிமன்றம் உள்ளது என்பதை 9-ந் தேதி அளித்த தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. ஏற்கனவே 6 வார காலம் கெடு கொடுத்தார்கள். அதை மத்திய அரசு மதிக்கவில்லை.

நீதிமன்றம் அவமதிப்பு என்று தெரிந்தும் உச்ச நீதிமன்றம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய நீர்வளத்துறை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள் ஆகியோரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அதை கண்டுகொள்ளாமல் மேலும் மே மாதம் 3-ந் தேதி வரையில் கால நீட்டிப்பு தந்திருக்கிறது. இந்த காலநீட்டிப்பு மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அல்ல ஒரு செயல்திட்ட வரைவு அறிக்கையை அளிக்க வேண்டும் என்ற காலநீட்டிப்பு. இது மிகப்பெரிய துரோகம். செயல்திட்ட வரைவு அறிக்கை என்பது இறுதியானஅறிக்கை அல்ல, அன்றைக்கே இறுதிபடுத்தக்கூடிய அறிக்கையாகவும் இருக்க முடியாது. அதன்மீது தமிழகம் சார்பில் மாற்றம் செய்ய கோரலாம், கர்நாடகமும் அதில் திருத்தம் செய்ய வற்புறுத்தலாம் மேலும் கால நீட்டிப்பு கோரவும் வாய்ப்பிருக்கிறது. உச்சநீதிமன்றமே தேவையான காலநீட்டிப்பை தருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்கள் மே 3-ந் தேதியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை கடந்த 9-ந் தேதி தீர்ப்பிலிருந்து தெரியவருகிறது.

இது மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு செய்கிற பச்சை துரோகமாகும்.கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக பா.ஜ.க. ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களும் துரோகம் செய்துவருகிறது. நாளை 12-ந் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்குகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபயணம் மேற்கொள்ளும் நாங்கள் கருப்பு சட்டை அணிந்து நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளோம்.

நேற்று ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினர் தடியடி நடத்தி பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஐ.பி.எல். போட்டி நடத்துபவர்கள் தமிழர்களின் இந்த போராட்ட உணர்வை திசைதிருப்புவதற்காக நடத்துகிறார்கள்.

நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க அரசு பச்சை கொடி காட்டுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஜெயலலிதா இல்லை என்பதை நினைத்துபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அ.தி.மு.கவுக்கு மிகப்பெரிய வரலாற்று களங்கமாக படியும் என்பதை அ.தி.மு.க.வை வழிநடத்துபவர்கள் உணராமல் இருப்பது பரிதாபமாக உள்ளது.

Leave a comment