எழும்பூரில் ரெயில் மறியல்- அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் கைது

23188 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் அன்புமணி தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைதாகினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் ரெயில் மறியல் நடந்தது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதனால் பா.ம.க.வினர் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் திரண்டனர். வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகில் இருந்து ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

போராட்டக்காரர்கள் நிலையத்தில் நுழையாமல் தடுக்க தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். ரெயில் நிலையத்தின் அனைத்து நுழைவுப் பகுதியிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மெயின் வாசலை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். காவிரி நீர் தராமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசே, மோடி அரசே உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே சென்ற சிலர் ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பா.ம.க. தொண்டர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் அன்புமணி, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a comment