ஐ.தே.க.வினருக்கு பண மூடை ; த.தே.கூ.வினருக்கு அரசியலமைப்பு வாக்குறுதி – வெளிப்படுத்தியது கூட்டு எதிரணி

1205 0

நம்பிக்கையில்லா பிரேரணையை பிரதமர் வெற்றிகொள்ள ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பண மூடையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தே ஆதரவை பெற்றுகொண்டார் என பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியது.

எமது பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் எமது இலக்கு வெற்றிபெற்றுவிட்டது. தேசிய அரசாங்கத்தை பிளவுபடுத்திவிட்டோம் எனவும் அவர்கள் கூறினார்கள்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தின் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். விவாதத்தில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன உரையாற்றுகையில்,

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மத்திய வங்கியில் மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த ஊழல்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடி தொடர்பினை கொண்டுள்ள நிலையில் இவற்றினை கருத்தில் கொண்டே நாம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்துள்ளோம்.

நாம் முன்வைத்த பிரேரணையை எவரும் எதிர்க்கவில்லை, அரசாங்கத்தில் உள்ளவர்களும் கடந்த காலத்தில் இருந்து எமக்கு சார்பாகவே கருத்துக்களை முன்வைத்து வந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பிரதமரை விமர்சித்து மத்திய வங்கி விவக்கரதில் ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டும் கருத்துக்களை முன்வைத்தனர்.

ஆகவே இவர்களால் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க முடியாது. அவ்வாறு ஒரு முயற்சி முன்னெடுக்கப்படும் என்றால் அது இந்த நாட்டின் சகல இன மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். பிரதமருக்கு எதிராக  நாம் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை பிரதமர் வெற்றிகொள்ள கடந்த காலத்தில் இருந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தமை அறிய முடிந்தது.

எவ்வாறு இருப்பினும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றின் கொண்டாலும் கூட இந்த நாட்டில் மக்கள் உண்மைகளை அறிந்துகொள்ள முடிந்துள்ளது. இதுவே எமக்குக் கிடைத்த வெற்றியாகும் என குறிப்பிட்டார்.

விவாதத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச எம்.பி கூறுகையில்,

பிரேரணையை வெற்றிகொள்ள ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பணம் மூடை மூடையாக குவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பிரதமர் சகல தரப்பையும் சந்தித்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களை ஆராய்ந்து பணத்தை வாரி இறைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினரே தெரிவித்துள்ளனர்.

இதுவரை காலமாக  ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய பிரச்சினைகள் அனைத்திற்கும் நாம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை தீர்வை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இறுதி நேரத்தில் இணக்கப்பாட்டை  எட்டியுள்ளனர். ஆகவே பிரதமர் அனைவரையும் அரவணைத்து தனது இருப்பினை தக்கவைக்கும் நோக்கினை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படுவதால் அரசாங்கம் தப்பிவிட்டதாக கருத வேண்டாம். இனிமேல் அரசாங்கத்திற்கு நெருக்கடி தொடரும். வெற்றி பெற்றோம் என மார் தட்டிக்கொள்ளும் அரசாங்கம் தைரியம் இருப்பின் உடனடியாக பொதுத் தேர்தலை நடித்தி எம்முடன் போட்டிபோட்டுக் காட்டுங்கள் எனவும் குறிப்பிட்டார்.

விவாதத்தில் உரையாற்றிய வாசுதேவ நாணயகார எம்.பி கூறுகையில்,

பிரதமர் தமது இருப்பினை தக்க வைக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு பணத்தை வாரி  இறைத்து வருவதாக கருத்துக்கள் கூறப்படுகின்றது. அதன் உண்மை தன்மை குறித்து எனக்கு தெரியாது. ஆனால் பண மூடைகளே இன்று இருப்பினை தக்கவைத்து வருகின்றது. அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ள கடந்த கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதாக கூறியுள்ளதாக சுமந்திரன் எம்.பி என்னிடம் தெரிவித்தார்.

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரவும், ஐக்கிய தேசியக் கட்சி பிரதமரை ஆதரிக்கவும் பிரதமர் கடினமாக பாடுபட்டுள்ளார் என்பது தெரிகின்றது எனக் குறிப்பிட்டார்.

விவாதத்தில் உரையாற்றிய மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி கூறுகையில்,

இந்த அரசாங்கத்தை காப்பாற்றும் அமைச்சர்களே இன்று அரசாங்கத்தில் நெருக்கடியில் உள்ளனர். குறிப்பாக சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் உங்களின் மனசாட்சிக்கு அமைய கூறுங்கள், இந்த ஆட்சியில் உங்களின் மக்களுக்காக என்ன நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளது? அமைச்சர் மனோ கணேசன், திகாம்பரம், ராதாகிருஷ்ணன் உங்களின் மனசாட்சிக்கு உண்மையாக கூறுங்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் கூறுங்கள் உங்களின் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றதா? இல்லை.

நீங்கள் மக்கள் முன்னிலையில் சென்று பொய்களை கூறி பிரதமரை காப்பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறீர்கள். ஆனால் மக்கள் இவற்றினை நம்பி இனியும் ஏமாற மாட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள நபர்கள் இன்று மட்டுமே மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். நாளை விடியும் நேரம் மீண்டும் பிரதமர் தனது சுய ரூபத்தை வெளிப்படுத்துவார்.

கடந்த இரண்டு வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து பிரதமரை எதிர்த்த அனைவருக்கும் மீண்டும் நெருக்கடிகள் ஏற்படும். அடுத்த இரண்டு ஆண்டுகள் மிகவும் நெருக்கமான நிலையில் கொண்டுசெல்லப்படும். நீங்கள் அனைவரும் ஆட்சிக்குள் இருந்து மோதிக்கொள்வதை நாம் எதிர்க்கட்சியில் இருந்து வேடிக்கை பார்க்கையில் எமக்கும் ஒரு குதுகலமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment