காவிரி விவகாரம் தொடர்பாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார காலம் கெடு விதித்திருந்தது. ஆனால் மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மத்திய அரசு இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வந்தது. கடைசி நேரத்தில், தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் 3-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தவுள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில்
மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செல்ல எந்த தடையும் இல்லை. ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
மேலும், மெரினா கடற்கரை இணைப்பு சாலை மற்றும் காந்தி சிலை அருகே சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

