காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.
தி.மு.க. சார்பில் சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கும், அதற்கு அழுத்தம் கொடுக்காமல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கும் எதிராக அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு போராட தி.மு.க. விரும்புகிறது.
எனவே, அனைத்துக் கட்சிகளுடன் கலந்து பேசுவதற்கு ஏப்ரல் 1-ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை நடத்தி, அதில் பெறப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக முடிவு எடுக்க மு.க.ஸ்டாலினுக்கு இச்செயற்குழு அதிகாரமளித்தது.
இந்நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர்கள் திரண்டனர். அங்கு வந்த அனைத்து கட்சி தலைவர்களையும் செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., தி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

