தமிழக அரசின் தலைமை செயலாளர், தலைமை வழக்கறிஞர் இன்று ஆளுநருடன் சந்திப்பு

431 0

காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார காலம் கெடு விதித்திருந்தது. ஆனால் மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மத்திய அரசு இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வந்தது. கடைசி நேரத்தில், தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் 3-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தவுள்ளது.

இந்நிலையில், காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் இன்று சந்திக்க உள்ளனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தனர்.

Leave a comment