காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 3-ந்தேதி அதிமுக உண்ணாவிரதம்

315 0

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவித்த பிறகும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. உச்சநீதிமன்றம் விடுத்த கெடு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, மதுரையில் 120 ஏழை ஜோடிகளுக்கு இன்று திருமணத்தை நடத்தி வைத்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
அப்போது, தமிழகத்தின் ஜீவாதார வாழ்வுரிமை எந்த நேரத்திலும் பறிபோகாத வகையில் எங்களது குரல் ஒலிக்கும். இதற்கு அடையாளமாக உண்ணாவிரத அறப்போர் நடைபெறும். இந்த போராட்டத்தில் திரளான கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் உண்ணாவிரதம் ஏப்ரல் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 2-ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். மாவட்ட தலைநகரங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Leave a comment