அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் தான் பிரதமர் நடவடிக்கை எடுப்பார்- மு.க.ஸ்டாலின்

1062 0

அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒரு அ.தி.மு.க. எம்.பி. தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருக்கிறாரே?

பதில்:- அந்த உணர்வுக்கு நான் மதிப்பளிக்கிறேன். இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவர் ராஜினாமா செய்வதாக தெரிவிப்பதால் எந்தவித பயனுமில்லை. அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்தால் தான் பிரதமர் அசைந்து கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். இனியாவது, அ.தி.மு.க. அதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசியல் ரீதியான அழுத்தம் தரவேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறாரே?

பதில்:- நான் அதை வரவேற்கிறேன்.

கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் தி.மு.க.வின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

பதில்:- அ.தி.மு.க.வின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முன்வந்தால், அடுத்த வினாடியே தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும், ராஜ்யசபா உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம் என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். மீடியாக்களின் பரபரப்புக்காக நாங்கள் எதையும் அறிவிக்கவில்லை. காரணம், இது தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினை. வேறு எந்தவிதமாக அழுத்தம் தந்தாலும், பா.ஜ.க. அரசும், பிரதமர் மோடியும் மசியப்போவதில்லை. கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் அது நிறைவேறும் என அக்கட்சியை சேர்ந்த எச்.ராஜா வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார். இதிலிருந்து அவர்களுடைய உள்நோக்கமும், எண்ணங்களும் தெளிவாக தெரியவந்துள்ளன.

கேள்வி:- இதுதொடர்பாக, பிரதமரை நீங்கள் சந்திப்பீர்களா?

பதில்:- பிரதமரை இதுதொடர்பாக சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் பயனில்லை. எனவேதான், அவரை கருப்பு கொடியுடன் சந்திக்கும் முயற்சி மேற்கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Leave a comment