சமையல் எரிவாயு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய எரிவாயுக்களின் விலையினை 275 ரூபாவால் அதிகரிக்க பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுவருவதாக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சில் இன்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் அரச அதிகாரிகள் இதனை அறிவித்துள்ளனர்.
பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பது குறித்து நிதியமைச்சு மற்றும் வணிக கைத்தொழில் அமைச்சு என்பன இணைந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன.
சர்வதேச மட்டங்களில் ஏற்பட்ட விலை மாற்றங்களுக்கு அமைய விலையினை அதிகரிக்க குறித்த நிறுவனங்கள் கோரிக்கைகளை விடுத்தன. ஆனால் புத்தாண்டு காலப்பகுதியில் விலையினை அதிகரிக்க முடியாது என தேசிய நுகர்வோர் அதிகார சபை அறிவித்தது.
பால்மாவின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. இருப்பினும், சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இதுவரை எவ்வித தீரமானங்களும் அரசமட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

