தீவகம் தெற்கு வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (E.P.D.P) வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களைப் பெறாத நிலையில், குறித்த சபையின் ஆட்சி பொறுப்பை அமைக்க அந்தந்தப் பிரதேசங்களில் அதிக ஆசனங்களை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் உரிமை கோரியிருந்த நிலையில், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் தவிசாளர் தெரிவு நடைபெற்றது.
இதன் அடிப்படையில் குறித்த சபைக்கான பலப்பரீட்சை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் உறுப்பினர் நாவலனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் கருணாகர குருமூர்த்தியும் போட்டியிட்டனர்.
20 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 6 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2 தமிழ் தேசிய முன்னணி சுதந்திரக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனங்கள் வீதம் பெற்றிருந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த சபைக்கான வாக்கெடுப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகியன வெளிப்படையான ஆதரவை வழங்கிய நிலையில், குறித்த சபைக்கான ஆட்சி அதிகாரத்ததை பெறும் போட்டி சம வாக்குகளை பெற்றிருந்த நிலையில், குலுக்கல் முறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கருணாகர குருமூர்த்தி தவிசாளராக தெரிவானார்.

