ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணை சப்ளை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசின் படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கி வான்தாக்குதல் தொடுத்து வருகின்றன.
இதற்கு பழிவாங்கும் வகையில் அவ்வப்போது சவுதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி ஏமன் கிளர்ச்சியாளர்கள் வீசிய 7 ஏவுகணைகளை சவுதி கூட்டுப்படையினர் நடுவானில் வழிமறித்து அழித்ததாக தகவல்கள் வெளியாகின.
அந்த ஏவுகணை சிதறல்கள் விழுந்து எகிப்தை சேர்ந்த ஒருவர் பலி ஆனார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணை சப்ளை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது.
இதுபற்றி ஈரான் ராணுவ உயர் அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் யதோல்லா ஜாவனி நேற்று கூறுகையில், “ஏமனுக்கு ஆயுதங்கள் எடுத்துச்செல்லக்கூடிய அனைத்து வழித் தடங்களும் அடைக்கப்பட்டு விட்டன என்பதை அனைவரும் அறிவார்கள்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “ஏவுகணைகள் உள்பட தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய ஆற்றலை ஏமன் நாட்டினர் பெற்றுவிட்டனர். இது சவுதியினர் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாதனையாக அமைந்து உள்ளது” என குறிப்பிட்டார்.

