சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் பகுதியில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள போராட்டக்காரர்களை குறிவைத்து நேற்று ரஷ்ய விமானப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 58 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23-ம் தேதி அர்பின் பகுதியில் உள்ள மருத்துவமனையை குறிவைத்து நடத்தப்பட்ட விமானப் படை தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

