வடக்கு மாகாணம் சனத்தொகை குறைந்த மாகாணமாக இருப்பதால் அங்கே படைமுகாம்கள் அமைக்கலாம்

392 0

Uthayaவடக்கு மாகாணத்தில் சனத்தொகை குறைவாகையால் அங்கே இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு பொருத்தமானதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களில் 80 வீதமானவை வடக்கிலிருந்தே வந்துள்ளன எனவும், ஆகையால் வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் ஐநா செயலர் பான்கிமூன் இலங்கைக்கு பயணம் செய்திருந்தபோது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாதங்களுக்குள் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தெற்கில் இனவாதிகளால் இராணுவத்தை அகற்றும் செயற்பாடுகளுக்கு தடைஏற்படக்கூடும் என்பதால் கட்டம் கட்டமாகவே நிறைவேற்றமுடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு 80வீதமான அச்சுறுத்தல் வடக்கிலிருந்து வந்துள்ளதால் அங்கே இராணுவத்தினரை நிலைகொள்ளவைப்பது மிகவும் அவசியம்.

அத்துடன் வடக்கு மாகாணம் சனத்தொகை குறைந்த மாகாணமாகையால் அங்கே இராணுவ நிலைகள் அமைக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.