கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்ற ஜப்பான் உதவி

352 0

Japan_Flagஇலங்கையை கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கு ஜப்பான் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2020ஆம் ஆண்டளவில் கண்ணிவெடிகள் முற்றாக இலங்கையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு,கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு கடந்த 2003ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பானானது இலங்கைக்கு உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த உதவியானது எதிர்வரும் வருடங்களிலும் வழங்கப்படவுள்ளதாகவும்,இதற்காக 28.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி ஜப்பானால் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச் சுகனுமோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதுவராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது வடக்கில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 864 இலட்சங்கள் நிதியுதவி வழங்குவதற்கு ஜப்பான் இணங்கியுள்ளதோடு,அதற்கான ஒப்பந்தமானது ஜப்பானின் தூதுவர் கெனிச் சுகனுமோ மற்றும் ஹெலோ ட்ரஸ்ட் அமைப்பின் நிர்வாகி எட்வட் ரொபட் சைபிரட் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பானின் நிதியுதவியுடன் இதுவரை 26 ஹெக்டயருக்கு அதிகமான நிலப்பரப்புகளில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த பிரதேசங்களில் இருந்து 8,183 கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதோடு,800 மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புடன் இங்கு மீள்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஹெலோ ட்ரஸ்ட் அமைப்பின் நிர்வாகி எட்வர்ட் ரொபட் தெரிவித்துள்ளார்.