கவுந்தப்பாடி அருகே கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தாய் – 2 மகள்கள் தற்கொலை

357 0

ஈரோட்டில் 2 மகள்களுடன் தாய் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ளது. தயிர்பாளையம். இந்த ஊரை சேர்ந்தவர் ராஜூ (வயது 52). இவரது மனைவி ஜெயமணி (48).

இவர்களுக்கு தனுஷ்யா (19), பவித்ரா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். தனுஷ்யா ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். பவித்ரா 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்.

இவர்களது வீடு தனியாகவும் தோட்டம் தனியாகவும் உள்ளது. நேற்று இரவு ராஜூ தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச தோட்டத்துக்கு சென்று விட்டார்.

இன்று காலை ராஜூ தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது உள்ளே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

உடனே அவர் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டார். பிறகு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

உள்ளே வீட்டில் இருந்து கியாஸ் சிலிண்டர் லீக்காகி வெடித்து இருந்தது. அருகே ராஜூ மனைவி ஜெயமணி மற்றும் 2 மகள்களும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்த ராஜூ கதறி அழுதார். பிறகு அவரும் மூர்ச்சை அடைந்து மயங்கி விழுந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் அங்கு பொதுமக்கள் திரண்டனர். உடனடியாக கவுந்தப்பாடி போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.

மயங்கி கிடந்த ராஜூவை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் ராஜூ தோட்டத்துக்கு சென்ற சமயத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்து வெடிக்க வைத்து தாயும் 2 மகள்களும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

2 மகள்களுடன் தாய் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சம்பவம் நடந்தபோது கணவர் ராஜு வீட்டில் இல்லை. இதனால் தாய் மற்றும் மகள்களை சிலிண்டர் வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment