குரங்கணி காட்டுத் தீ: சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்- முதலமைச்சர் பதில்

336 0

குரங்கணி காட்டுத் தீ தொடர்பாக சட்டசபையில் இன்று மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கலுடன் முதல்நாள் கூட்டம் நிறைவு பெற்றது. அதன்பிறகு, 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

காலை 10 மணிக்கு அவை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் சபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியது.

கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். பின்னர் குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய ஸ்டாலின், காட்டுத்தீ குறித்து எப்.எஸ்.ஐ. எச்சரித்துள்ளது, எனவே, வனத்துறை அதிகாரிகள் எப்.எஸ்.ஐ. நிறுவனத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றார்.

பின்னர் இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, அனுமதி பெறாமல் மலையேற்றத்திற்கு சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

‘மலையேற்றத்துக்கு உதவியாக வன அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக 200 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.  குரங்கணியில் அனுமதியில்லாமல் கொழுக்குமலைக்கு சென்று அவர்கள் சிக்கி உள்ளனர். வன அலுவலர்கள் அங்கு சென்றபோதுதான் தீ விபத்து அறியப்பட்டு போர்க்கால அடிப்டையில் மீட்பு நடைபெற்றது’ என்றார் முதல்வர்.

Leave a comment