இமயமலை ஆசிரமத்தில் ஆன்மீக வாதிகளை கவர்ந்த ரஜினி!

218 0

இமயமலையில் மிக எளிமையாக வலம் வரும் ரஜினியின் நடவடிக்கைகள் அங்குள்ள ஆன்மீக வாதிகளை மிகவும் கவர்ந்துள்ளது.

ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இமயமலைக்கு சென்று ஆன்மீக புத்துணர்ச்சி பெற்று திரும்புவதை ரஜினி வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அரசியல் பிரவேசம் செய்துள்ள நிலையில் அவரது இமயமலை பயணம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

கடந்த 14-ந்தேதி இமய மலை சென்றடைந்த ரஜினி ரிஷிகேஷ் செல்வதற்கு முன்பு தனகிரி என்ற இடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது உள்ளூர் அரசியல் பிரமுகரான வினய் உனியல் என்பவர் ரஜினியுடன் உரையாடி இருக்கிறார். அந்த உரையாடல் பற்றி உனியல் கூறியதாவது:-

ஒரு சூப்பர் ஸ்டாருடன் பேசியது போன்ற எண்ணமே இல்லை. அந்த அளவுக்கு எளிமையாக இருந்தார். நாங்கள் ஒரு குழு அமைத்து கங்கை ஆற்றை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதுபற்றி அறிந்ததும் பாராட்டு தெரிவித்தார். எங்கள் குழுவில் இருக்கும் ரிஷிகேஷ் பகுதி எம்.எல்.ஏ.வையும் போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

கங்கை ஆறு மட்டுமல்ல நாடுமுழுவதும் உள்ள அனைத்து நதிகளையும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரஜினியுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

ரிஷிகேசிஜில் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி இருக்கும் ரஜினி மற்ற ஆன்மீக வாதிகளைப் போல் சாதாரணமாகவே காணப்படுகிறார்.

ஒரு சிறிய அறையில் தங்கி இருக்கிறார். அவருக்காக விசே‌ஷ உணவு எதுவும் தயார் செய்யப்படவில்லை. ஆன்மீக வாதிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார். அங்கு நடைபெறும் ஆன்மிக கலந்துரையாடல், முகாம்கள், கருத்தரங்குகளில் பங்கேற்று வருகிறார்.

Leave a comment