மூச்சுத்திணறலால் கவலைக்கிடம் – நடராஜனிடம் நலம் விசாரித்தனர் வைகோ, திருமாவளவன்

206 0

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நடராஜனை சந்தித்து வைகோ, திருமாவளவன் உடல் நலம் விசாரித்தனர்.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்ற வேண்டும் என்கிற நிலை உருவானது. இதனை தொடர்ந்து தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த 2 உறுப்புகளையும் நடராஜனுக்கு தானமாக கொடுத்தார். உடல் உறுப்பு மாற்று ஆபரே‌ஷன் மூலமாக நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொறுத்தப்பட்டன. இதன் பின்னரே நடராஜன் உயிர் பிழைத்தார். 1 மாதம் அவருக்கு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல்நிலை தேறிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி நடராஜன் வீடு திரும்பினார். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்து அவர் ஓய்வெடுத்து வந்தார். ஒவ்வொரு மாதமும் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நிலையை பரிசோதித்து வந்தார்.

இந்த நிலையில் நடராஜனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவலைக்கிடமான நிலையில் நடராஜனின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர், நேற்று இரவு நடராஜனை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

நடராஜனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வைகோ கூறும்போது, எனது 50 ஆண்டுகால நண்பர் நடராஜன். அவரது உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நல்லதே நடக்கும் என்று நம்புவோம் என்றார்.

திருமாவளவன் கூறும் போது, நடராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவருக்கு டாக்டர்கள் கவனமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.

Leave a comment