5 தமிழ் மென்பொருள் அடங்கிய தமிழ் இணைய மென்பொருள் தொகுப்பு !

1777 0

5 தமிழ் மென்பொருள் அடங்கிய தமிழ் இணைய மென்பொருள் தொகுப்பினை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ் மென் பொருள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், தமிழ் இணையக் கல்விக் கழகத்தினால், தமிழிணையம் பிழை திருத்தி, தமிழிணையம் அகராதி தொகுப்பி, தமிழிணையம் கருத்துக்களவு ஆய்வி, தமிழிணையம் சொற்றொடர் தொகுப்பு, தமிழிணையம் தரவு பகுப்பாய்வி ஆகிய 5 தமிழ் மென்பொருட்கள் அடங்கிய “தமிழிணைய மென்பொருள் தொகுப்பு” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் தொகுப்பினை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ் இணைய கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த “தமிழிணைய மென்பொருள் தொகுப்புமிமிமி, தட்டச்சர்கள், தமிழ் நூல்களை வடிவமைப்போர், தமிழ் நூல் வெளியீட்டாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு பேருதவியாக இருக்கும்.

இந்த மென்பொருள் தொகுப்பினை, கணினியில் தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்கையில் ஏற்படும் எழுத்துப் பிழைகளை கண்டறிந்து அவற்றை பிழை திருத்தம் செய்தல், தமிழ் சொல்லுக்கு தமிழ் அகரமுதலி, தமிழ்லெக்சிகன், கதிர்வேலு பிள்ளை அகராதி போன்ற அகராதிகளில் உள்ள பொருள் அறிதல், கருத்துக் களவினை கண்டறிதல், தமிழ் தளங்களில் உள்ள சொற்றொடர்களைத் தொகுத்தல், தமிழ்சொற்களை அவற்றின் சொல் எண்ணிக்கை, வகைப்படுத்தல் மற்றும் முன்பின் சொற்களை கண்டறிந்து பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.

இம்மென் பொருள் தொகுப்பினை தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய தளத்தில் தேவையான தரவுகளை உள்ளீடு செய்வதன் மூலம் இலவசமாகப் பயன்படுத்தலாம்.

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மகளிர் தொழிற் பூங்காவில் 11834 சதுர அடி நிலப்பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன் 8552 சதுர அடி கட்டட பரப்பளவில் 2 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற் பேட்டையில் உள்ள மகளிர் தொழிற் பூங்காவில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம் கருப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மகளிர் தொழிற் பூங்காவில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மகளிர் தொழிற் பூங்காவில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மகளிர் தொழிற் பூங்காவில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 7 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 உலகத் தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையக்கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் நாடு மாநில முதன்மை நிலை பளு தூக்கும் மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

இந்த தமிழ்நாடு மாநில முதன்மை நிலை பளு தூக்கும் மையக் கட்டடத்தின் கீழ்த் தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சர்வதேச அளவிலான 6 பளு தூக்கும் பயிற்சி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு மேல் பயிற்சி பெறலாம்.

இந்த முதன்மை நிலை பயிற்சி மையத்திலேயே தங்கி பயிற்சி பெற விரும்பும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவதற்கு ஏதுவாக, முதல் தளத்தில், அறைக்கு 6 நபர் வீதம் 25 பெண்களுக்கான 4 தங்கும் அறைகள், இரண்டாம் தளத்தில், அறைக்கு 6 நபர் வீதம் 25 ஆண்களுக்கான 4 தங்கும் அறைகள் என மொத்தம் 8 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த கட்டடம் படிக்கும் அறை, மருத்துவ அறை, குளியலறைகள், கழிவறைகள், மற்றும் பயிற்சிக்காக அதிநவீன பளு தூக்கும் உபகரணங்கள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த முதன்மை நிலை பளு தூக்கும் மையத்தின் மூலம், பள்ளிமற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு பயிற்சி பெற்று தங்கள் திறனை வளர்த்துக் கொண்டு தேசிய மற்றும் சர்வதேச பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வெல்ல ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மணிகண்டன், கே.சி. வீரமணி, நிலோபர் கபீல், பால கிருஷ்ணா ரெட்டி, பென்ஜமின், பாண்டிய ராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment