தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு – முதல்வர் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

316 0

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து முதல்வர் தரப்பு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் எம்ஜிஆர் அம்மா திமுக, எம்ஜிஆர் அம்மா திக மற்றும் அனைத்திந்திய அண்ணா அம்மா திமுக ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறு தினகரன் கோரியிருந்தார். தனது அணி அ.தி.மு.க. அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறும், கட்சிக்கு தினகரன் பரிந்துரை செய்த பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து, மதுரையில் நாளை டிடிவி தினகரன் புதிய கட்சிப் பெயரை அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய டெல்லி ஐகோர்ட் வழங்கிய உத்தரவை எதிர்த்து முதல்வர் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும் கட்சி பெயரையும் ஐகோர்ட் ஒதுக்கியது, தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிரான என மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குக்கர் சின்னம் தொடர்பாக யாரேனும் மனு தாக்கல் செய்தால், தன்னை கேட்காமல் உத்தரவுகள் பிறப்பிக்க கூடாது என தினகரன் சார்பில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment