இலங்கை அரசிடம் கால அவகாசம் கோரும் பேஸ்புக் நிறுவனம்

217 0

இலங்கை அரசாங்கத்திடம் பேஸ்புக் நிறுவனம் கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் உள்ள பதிவுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் பதிலளிக்கும் போதே பேஸ்புக் நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

சிங்கள மொழி பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக குறித்த கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள மொழி அறிவுகொண்ட போதுமானளவு பணியாளர்கள் தற்போது தமது நிறுவனத்தில் இல்லை எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கை வரும் அவர்கள், அரசுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், 16ஆம் திகதியளவில் பேஸ்புக் மீதான தடை நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பேஸ்புக் மீதான தடை அரசியல் சார்ந்த விடயம் அல்ல, இனவாதத்தை தூண்டும் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையான பதிவுகளை தொடர்ந்து இடம்பெற அனுமதிக்க முடியாது. இந்தவிடயத்தில் பேஸ்புக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. அந்த நிறுவனம் வழங்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த தடையை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a comment