நேபாளம் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது

232 0

காத்மாண்டு விமான நிலையத்தில் வங்காளதேசம் அரசுக்கு சொந்தமான விமானம் 71 பேருடன் விழுந்து தீபிடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு வந்த யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் (உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.20 மணியளவில்) காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது.
வானத்தில் இருந்து கீழே இறங்கி, ஓடுபாதை எல்லைக்குள் நுழைந்தபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிசென்று அருகாமையில் உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விழுந்து தீ பிடித்து எரிந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமான நிலைய மீட்புப் படையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீப்பற்றி எரியும் விமானத்துக்குள் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய சிலரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் நேபாள நாட்டை சேர்ந்த 33 பேரும், வங்காளதேசத்தை சேர்ந்த 32 பேரும், சீனா மற்றும் மாலத்தீவை சேர்ந்த தலா ஒருவரும் பயணம் செய்ததாகவும், விமானிகள், பணியாளர்கள் உள்பட மொத்தம் 71 பேர் அதில் வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
பிற்பகல் நிலவரப்படி மீட்கப்பட்ட சுமார் 20 பேரில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், விமானத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் நேபாள நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.
இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேபாளம் நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் கோகுல் பன்டாரி, இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோர விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான செய்திகள் வெளியானதும் நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment