முன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆலோசனை

237 0

முன்னாள் ரஷிய உளவாளிக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். 

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது.

தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஷியா இருக்கலாம் என கருதப்படுகிறது.

அவ்வாறு ரஷியாவின் தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment