வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான சிசு காணாமல் போன விவகாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் அனுராதபுரத்தை சேர்ந்த யுவதி ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கலாபோகஸ் வெலவை சேர்ந்த எம்.எம். கல்யாணி மானகே (வயது 37) என்ற பெண் அனுமதிக்கப்பட்டு குழந்தையை பெற்றுள்ளார். இரண்டு நாட்களாக தாயின் பராமரிப்பில் வைத்தியசாலையில் இருந்த சிசு தாய் மலசலகூடம் சென்று திரும்பியபோது திடீர் என காணாமல் போயிருந்தது. இதனையடுத்து சிசுவின் தாயாரால் வைத்தியசாலை தாதியர்களிடம் தெரிவிக்கப்பட்டு குழந்தையை தேடும் பணிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்பட்டு சிசுவைத் தேடியபோதிலும் சிசு இன்மையால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந் நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சிசு ஒன்றினை யுவதியொருவர் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டுவந்துள்ள நிலையில் அங்கிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சிசுவைக் கொண்டு வந்தவர் மேல் சந்தேகம் கொண்டு அவரை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தினர். இதனையடுத்து சிசுவைக் கொண்டு வந்த தாயார் சிசுவை பெற்றமைக்கான சான்றுகள் இன்மையாலும் வவுனியா வைத்தியசாலையில் சிசு காணாமல் போன செய்தி கிடைக்கப்பெற்றமையினாலும் அனுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து வவுனியா பொலிஸாருக்கும் வைத்தியசாலைக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தந்தையை பொலிஸார் அனுராதபுரத்திற்கு அழைத்து சென்றதுடன் ஆரம்பகட்ட விசாரணைகளின் பிரகாரம் தாயாரே குழந்தையை விற்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய தாயாரை வவுனியா வைத்தியசாலையில் வைத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை சிசுவை மரபணு பரிசோதனைக்குட்படுத்த வேண்டிய தேவையுள்ளமையினால் அனுராதபுரம் வைத்தியசாலையின் பராமரிப்பில் சிசு உள்ளது. சிசுவை வைத்தியசாலைக்கு கொண்டு வந்த 21 வயதுடைய யுவதியை கைது செய்த வவுனியா பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் பிரகாரம் குறித்த யுவதி திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில் குடும்பத்தினருடன் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தான் கர்ப்பமடைந்துள்ளது போல் பாசாங்கு செய்து வவுனியா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் இருந்து குழந்தையொன்றை எடுத்துச்செல்லும் நோக்குடன் வந்துள்ளார்.
இவர் விடுதிக்குள் நுழைந்தபோது குறித்த சிசுவே தாய் இல்லாத நிலையில் காணப்பட்டுள்ளது. எனவே அந்தச் சிசுவை எடுத்துச்செல்வது இலகுவாக இருந்தமையினால் சிசுவை எடுத்து அனுராதபுரத்திற்கு சென் றுள்ளார். எனினும் சிசுவுக்கு உடல்நலம் சீரின்மையை அவதானித்த குறித்த யுவதி அனுராதபுரம் வைத்தி யசாலைக்கு சிசுவை சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் அவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சிசுவின் தாயாரை பொலிஸார் விடு வித்துள்ளனர்.

