ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவாதங்களின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இலங்கையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையை இலங்கை இதுவரை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற விடயத்தை செய்ட் அல் ஹுசேன் எடுத்துரைப்பார் என்று தெரியவருகின்றது.
ஏற்கனவே அரசு சார்பாற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை கடந்த வெ ள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய அல் ஹுசேன் இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நாம் நிற்கின்றோம். இயன்றவரை நீதியை பெற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நிற்போம் என்று செய்ட் அல் ஹுசேன் தெரிவித்துள்ள நிலையில் அவர் இலங்கை குறித்து நடைபெறும் இரண்டு விவாதங்களிலும் கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சர்வதேச நாடுகளும் இலங்கை விவகாரத்தில் கடும் அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றன. தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் அமர்வு ஒன்றில் உரையாற்றிய கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் காணப்படுகின்ற தாமதம் காரணமாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்திருந்தன.
அத்துடன் இலங்கை அரசாங்கம் பொதுநலவாய மற்றும் சர்வதேச விசாரணையாளர்கள் நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை வெ ளிக்காட்ட வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ள நிலையில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதில் முன்னேற்றத்தை வெ ளிக்காட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பிரிட்டன் அறிவித்திருக்கிறது.
இதேவேளை இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் 14 உபக்குழுக்கூட்டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளன. இந்த கூட்டங்களில் இலங்கை பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
இன்று 12ஆம் திகதி பாரதி கலாசார அமைப்பினால் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. மனித உரிமைபேரவை வளாகத்தின் 23 ஆம் இலக்க அறையில் இந்த உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதேபோன்று 13 ஆம்திகதி தமிழ் உலகம் என்ற அமைப்பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபக்குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. 7 ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ள இந்த உபக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
மேலும் 14 ஆம்திகதி புத்துருவாக்க சமூக திட்ட முன்னணி என்ற அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்வதேச மனித உரிமை அமைப்பினால் இலங்கை விவகாரம் தொடர்பில் விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கையில் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் விவகாரம் தொடர்பிலேயே இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ளனர். 21 ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தக்கூட்டமும் 21ஆம் இலக்க அறையிலேயே நடத்தப்படவுள்ளது.
மேலும் மற்றுமொரு சர்வதேச அமைப்பினால் எதிர்வரும் 19 ஆம்திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக்கூட்டமானது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க பசுமை தாயகம் அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான உபக்குழுக்கூட்டம் 20 ஆம்திகதி 25 ஆம் இலக்க அறையில் நடைபெறவுள்ளது. இலங்கையின் நிலைமாறுகால நீதி தொடர்பாக இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதே தினத்தன்று சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பினால் இலங்கை தொடர்பான ஒரு விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
27ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தவகையில் இந்த அனைத்து உபக்குழுக்கூட்டங்களிலும் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன. விசேடமாக இலங்கை மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த உபகுழுக்கூட்டங்களில் ஆராயப்படவுள்ளன.
அதன்படி ஜெனிவா செல்லவுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் ஜெனிவா அமர்வுகளில் உரையாற்றவுள்ளதுடன் உபகுழுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். இதில் சில கூட்டங்களில் செய்ட் அல் ஹுசேனும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

