ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜப்பான் சென்றடைந்தார்

350 0

ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரச முறை பயணமொன்றை மேற்கொண்டு இன்று (12) ஜப்பான் சென்றடைந்தார்.

இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஜனாதிபதி ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டு டோக்கியோவில் உள்ள நரிடா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அரச முறை பயணத்தில் ஜனாதிபதி ஜப்பான் நாட்டின் மன்னர் அகிஹினோ பேரரசரையும் மிசிகோ மகா ராணியையும் சந்திக்கவுள்ளதுடன், ஜனாதிபதி அந்நாட்டின் உயர் கௌரவத்தை வழங்கி உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் 14ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்துவது குறித்து விரிவாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

விசேட வர்த்தக, முதலீட்டு மாநாட்டிலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளதுடன், ஐயிக்கா நிறுவனத்தின் தலைவர், ஜப்பான் வர்த்தக சங்கம் மற்றும் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக சங்கம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் விஜயத்தின் போது ஜப்பானில் உள்ள இலங்கை பௌத்த நிலையத்தின் தலைமை நாயக தேரரையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதுடன், அந்நாட்டின் நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தையும் பார்வையிடவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இப்பயணத்தில் ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

Leave a comment