டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசியது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்- திருமாவளவன்

255 0

காவிரி பிரச்சனை தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசியது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தர்மபுரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு கூட்டும் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாங்கள் கருத்து தெரிவித்து இருந்தோம்.

ஆனால் அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு உள்ளனர். அந்த கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்பதை வெளியிட வேண்டும். அதுவும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனை தொடர்பான தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தான் விளக்கி கிளியர் ஸ்கீம் உருவாக்க வேண்டும் என்று கூறி உள்ளது.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அதற்கு புதிதாக வேறு ஒரு ஸ்கீம் என்று அர்த்தம் கற்பிப்பது காலதாமதம் செய்வதற்கான வழியாகும்.

இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் திருச்சியில் கர்ப்பிணி பெண் இறந்து உள்ளார். இந்த சம்பவத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி உள்ளன.

இந்த சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. இறந்த கர்ப்பிணி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். சென்னையில் கல்லூரி முன்பு மாணவி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

இது மிகவும் வேதனை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க புலனாய்வு பறக்கும் படையை அமைத்து கண்காணிக்க வேண்டும். பாரதிய ஜனதா பெண் நிர்வாகி திருச்செந்தூரில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்ததுடன் செருப்பை தூக்கி காட்டியது அநாகரீகமான செயலாகும். பெண் நிர்வாகியின் செயலும், பெரியார் பற்றி எச்.ராஜா கூறிய கருத்தும் அவர்கள் எவ்வளவு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment