என்னை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.- துரைமுருகன் உருக்கமான பேச்சு

304 0

வேலூரில் நடைபெற்ற விழாவில் என்னை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். தான் என்று தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகித்தவர் எம்.ஜி.ஆர். அவர் என்னை சென்னையில் 4,5 ஆண்டுகள் படிக்க வைத்தார்.

எனக்கு பாதுகாவலராகவும் இருந்தார். சென்னை கல்லூரிகளுக்கான சேர்மன் தேர்தலில் என்னை நிற்க வைத்து வெற்றிபெற செய்தார்.

அன்று முதல் எனது அனைத்து வெற்றிகளுக்கும் உறுதுணையாக எனது நண்பர் விசுவநாதன் இருந்து வருகிறார்.

என்னை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். செதுக்கியவர் விசுவநாதன். எனது திருமணத்தின் போது மும்பைக்கு சென்றிருந்த எம்.ஜி.ஆர். தனி விமானம் பிடித்து வந்தார். அவர் வருகிறார் என்று தெரிந்ததும் மண்டபத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

எதிர்க்கட்சியாக இருந்த போது சட்டபேரவையில் பேசிக்கொண்டிருந்த நான் திடீரென மயங்கி விழுந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். ஓடிவந்து என்னை மடியில் தூக்கி வைத்து அவரது துண்டால் முகத்தை துடைத்தப்படி தம்பி என்ன ஆச்சி என கலங்கினார்.

அவர் அ.தி.மு.க.வுக்கு வருமாறு பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால் தி.மு.க.வின் மீதான பற்றால் அதை தவிர்த்து விட்டேன். இதை அவரே சட்டபேரவையில் வெளிப்படியாக பேசி பெருமைபடுத்தினார்.

எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் வேற்றுமை இருந்தாலும் நட்புறவு கொண்டிருந்தோம்.எனது நெஞ்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை. மறக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment