ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு- டிடிவி தினகரன் கண்டனம்!

272 0

ராமநாதபுரத்தில் தனது ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் கொத்தர் தெருவைச் சேர்ந்தவர் கமல். இவர் டி.டி.வி.தினகரன் அணி இளைஞர் அணியின் நிர்வாகியாக உள்ளார். இதே தெருவில் வசிப்பவர் தவமுனியசாமி. தினகரன் அணியில் இலக்கிய அணி நிர்வாகியாக உள்ளார். நேற்று இரவு இவர்கள் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர்.

நள்ளிரவில் தினகரன் ஆதரவாளர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த சமயத்தில் 4 பேர் மோட்டார் சைக்கிள்களில் வருவது பதிவாகி உள்ளது. அவர்களில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தனது ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசியதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“அமைச்சரின் உத்தரவின்பேரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தபோது காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு புகாரை வாங்க மறுத்து நீண்ட நேரம் காக்க வைத்தனர். தொண்டர்கள் திரண்டு வந்தபிறகே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். குற்றவாளிகளையும் அதன் பின்னணியில் உள்ளவர்களையும் பாரபட்சமின்றி காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.

காவல்துறையை ஏவல் துறையாகவும், சில நேரங்களில் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியின் நாட்கள் சுருங்கிக்கொண்டிருக்கிறது. அதிகார வெறிபிடித்தவர்களின் செயலுக்கும் பாரபட்சமாக நடந்துகொண்டிருக்கும் காவல்துறையினருக்கும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a comment