தமிழக பட்ஜெட் 15-ந்தேதி தாக்கல்?

349 0

தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 15-ந்தேதி தாக்கல் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடந்த பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த மாதம் 12-ந்தேதி ஜெயலலிதா திருவுருவ படத்தை திறந்து வைப்பதற்காக சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. அதன் பிறகு சபை ஒத்தி வைக்கப்பட்டது.

வருகிற 31-ந்தேதிக்குள் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதில் புதிய அறிவிப்புகளை இடம் பெறச் செய்ய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த மாதம் 2-வது வாரத்தில் 14 அல்லது 15-ந்தேதிகளில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது.

சட்டசபை செயலாளராக இருந்த பூபதி ஓய்வு பெற்று விட்டதால் அந்த பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. புதிய சட்டசபை செயலாளராக சீனிவாசன் என்பவரை கொண்டு வர முயற்சி நடப்பதாக தெரிகிறது.

பதவி நியமனம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே கோர்ட்டு அனுமதியுடன் தான் சட்டசபை செயலாளரை நியமிக்க முடியும். சட்டசபையை நடத்துவதற்கு சபாநாயகருக்கு உதவியாக சட்டசபை செயலாளர்தான் அனைத்து பணிகளையும் செயல்படுத்துவார்.

நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது, எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அனைத்தையும் சட்டசபை செயலாளர்தான் செய்து கொடுப்பார்.

சட்டசபை செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகே பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a comment