காவிரி பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

298 0

காவிரி பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வெளியிட்டது.

தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 192 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறி இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அந்த தண்ணீர் அளவை குறைத்து தீர்ப்பு அளித்தது.

அதாவது 177.25 டி.எம்.சி. தண்ணீர் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு அறிவித்தது. இதன் காரணமாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு குறைந்துள்ளது. இதனால் டெல்டா பாசன பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இந்த வாரியம் அமைக்கப்பட்டால் தமிழ் நாட்டுக்கு அந்தந்த பருவ காலங்களில் உரிய அளவு தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்படும்.

எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்காக கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த வாரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் டெல்லி செல்வார்கள் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் மோடி தயங்குவதாக தெரிய வந்துள்ளது. தமிழக தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்க பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை முதல்வரே தன்னிடம் தெரிவித்ததாக மு.க. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறினார்.

இதற்கிடையே வருகிற 7-ந்தேதி கர்நாடகாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தை அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா கூட்டி உள்ளார்.

கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வர இருப்பதால் அம்மாநிலத்திற்கு சாதகமாக பா.ஜ.க. தலைவர்கள் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க தயங்குவது தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. கட்சி தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நெருக்கடியை தவிர்க்கவும், அடுத்தக் கட்டமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானித்தார். அதனால்தான் அவர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியும், மு.க. ஸ்டாலினும் சந்தித்து காவிரி பிரச்சினை குறித்து விவாதித்தனர்.

இந்த சந்திப்பின்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 30 நிமிட நேரம் காவிரி பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவுகள் செய்யப்பட்டது. சட்டசபையை கூட்டி தீர்மானம் கொண்டு வருவது பற்றி பேசப்பட்டது.

பிரதமர் மோடி தமிழக தலைவர்களை சந்திக்க மறுத்து இருப்பதால் அடுத்தக் கட்டமாக தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நின்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடுவது என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

Leave a comment