முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ளது(காணொளி)

382 0

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையிலும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நில மீட்பு போராட்டம் இன்று ஒரு வருடத்தை எட்டியுள்ளது.

இந் நிலையில் தமது காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாட, இன்று காலை 10.00 மணிக்கு, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும், தமது போராட்ட இடத்திற்கு வருகை தருமாறு மக்கள் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர்.

அதற்கமைய, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆண்டியையா புவனேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.லோகேஸ்வரன், க.விஜிந்தன், க.தவராசா, இ.ரவீந்திரன் மற்றும் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது கலந்துரையாடிய மக்கள் பிரதிநிதிகள், போராட்டத்திற்கு சாதகமான தீர்வு கிடைக்காவிட்டால், மாபெரும் வெகுஜன போராட்டம் ஒன்றை நடாத்த உடன்பட்டுக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மக்கள் தாம் போராட்டம் மேற்கொண்டுவரும், முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையாக வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில், அரை மணி நேரம் தியானம் மேற்கொண்டதோடு போராட்ட கூடாரம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர்.

Leave a comment