சிரியா நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகளை கண்டித்து, கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

458 0

சிரியா நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.

சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமான யுத்தத்தில், நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் ஒரு மாத காலத்திற்கு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையிலும், அங்கு இதுவரை இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தில் ஈடுபடாமல் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரச படையினரின் வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

குறித்த மனித உரிமை மீறலைக் கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் கண்டனப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பாக சிரியாவில்  குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளிப்படுத்தினர்.

ஜ.நாவே உனது கள்ள மௌனத்தை கலை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல், பொது மக்கள் கொல்லப்படுதை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு, 2009 முள்ளிவாய்க்கால், 2018 இல் சிரியா, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கவனயீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

Leave a comment