கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக ஓட்டுப்போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டெல்லி மூத்த வக்கீல் வாதிட்டார்.
கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக ஓட்டுப்போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது அரசியலமைப்பு சட்டத்தின்படி சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அந்த நடவடிக்கையை ஐகோர்ட்டு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டெல்லி மூத்த வக்கீல் வாதிட்டார்.
தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது இந்த தீர்மானத்துக்கு எதிராக தற்போது துணை முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் ஓட்டுப்போட்டனர். இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல் உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சக்கரபாணி சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில், ‘அரசியலமைப்பு சட்டத்தின்படி சபாநாயகர் தன் கடமையை செய்யத் தவறினால், அந்த கடமையை நீதிமன்றமே செய்யலாம். அதாவது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக ஓட்டுப்போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது அரசியலமைப்பு சட்டத்தின்படி சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அந்த நடவடிக்கையை ஐகோர்ட்டு எடுக்க வேண்டும். கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது சபாநாயகர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். சபாநாயகர் நடுநிலையாளராக செயல்படவில்லை’ என்று வாதிட்டார்.
மேலும் அவர், ‘நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட வேண்டும் என்று அரசு தலைமை கொறடா உத்தரவிடவில்லை என்று இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கொறடா உத்தரவு பிறப்பித்தார் என்று கூறியுள்ளார். ஐகோர்ட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் தவறான தகவல் கொடுத்துள்ளார். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக புகார் பெற்றுக்கொண்ட உடனே, அதற்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் அவ்வாறு சபாநாயகர் செயல்படவில்லை. எனவே, நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டுப்போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து மனுதாரர்கள் வெற்றிவேல், பார்த்திபன் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.
அவர், ‘கட்சி சார்பில் அறிவிக்கப்படும் முடிவுகள் என்பது, அந்த கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பொருந்தும். அதன்படி கொறடா உத்தரவு என்பது அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பொருந்தும். எனவே, நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டுப்போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பு வக்கீல்களின் வாதம் முடிவடைந்த நிலையில், மனுதாரர்கள் தரப்பு வக்கீல்களின் வாதமும் நேற்று முடிவடைந்தது.
இதையடுத்து நீதிபதிகள், வக்கீல்கள் வாதம் முடிவடைந்துவிட்டது. எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய விரும்பினால், இரு தரப்பினரும் வருகிற மார்ச் 5-ந் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

