காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்கு ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (வயது 82) இன்று காலமானார். அவரது மரணத்திற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை பாரதம் இழந்திருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஜெயேந்திரர் மறைவு குறித்து செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
சீர்திருத்தவாதியான ஜெயேந்திரர் நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர் என பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம் மாதவ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

