விஜயகாந்தின் அரசியல் நிலைமை அனைவருக்கும் தெரியும். அதுபோலத்தான் கமல்ஹாசனும் இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுவார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முகாசிப்புதூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சலவண பவா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது? இதுவரை தமிழக மக்களுக்காக என்ன சேவை செய்துள்ளார்? தமிழக அரசை குறை கூறும் இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? விஜயகாந்தின் அரசியல் நிலைமை அனைவருக்கும் தெரியும். அதுபோலத்தான் கமல்ஹாசனும் இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுவார்.
ரஜினிகாந்துக்கு தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை பற்றி பேச தகுதியில்லை. இவரெல்லாம் அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு என்ன நன்மை செய்ய போகிறார்? ஒன்று மட்டும் சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை ஒருவராலும் அசைக்க முடியாது.
கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா வகுத்த நலத்திட்ட உதவிகள் கிராமம் வாரியாக சென்றடைந்துள்ளது. அந்த அளவிற்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக வேரூன்றி விட்டது. பொதுமக்களின் தேவை அறிந்து பல்வேறு சலுகைகள் வழங்கிய எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் தற்போது அதிமுக வை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகிறார்.
வரும் காலங்களில் தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கி அதிமுக அரசு 100 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி புரியும்.இவ்வாறு அவர் கூறினார்.
பவானி ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான் மாணிக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.பி.பாலசுப்பரமணியன் மற்றும் அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

