பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

357 0
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (28) முதல் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இன்று முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் 2016.07.27 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் தங்களால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டுக் கடிதத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

மேற்கண்ட உடன்பாட்டிற்கு இசைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை என்பவற்றோடு அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி எம்மால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்திற் கொள்ளாத தன்மையைக் காணமுடிகின்றது.

எனவே, இவற்றிற்கான முடிவு கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எட்வட் மல்வத்த தெரிவித்துள்ளார்.

Leave a comment