முள்ளிவாய்க்கால் பகுதியில், கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது- மாவட்ட ஒருங்கிணைப்பு குழு(காணொளி)

264 0

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில், கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது என, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டுவரப்பட்ட தீர்மானமே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ளது.

குறித்த காணியை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 22 ஆம் திகதி அளவீடு செய்யப்படும் என, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, சுவீகரிப்பை கைவிடுமாறு கோரி பொது மக்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டமையால் காணி அளவீடு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், குறித்த விடயம் ஆராயப்பட்டு, குறித்த காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென, கடற்ப்படை அதிகாரி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால், பாதுகாப்பு அமைச்சுடன் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளடங்கிய குழு ஒன்று சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு இணைத்தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், தீர்மானம் எட்டப்படும் வரை காணி அளவீட்டு பணி எதுவும் நடத்தக்கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment